சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் வசதி படைத்த பக்தர்களை குறிவைத்து விரைவு தரிசனம் செய்து தருவதாக கூறி, தன்னிச்சையாக அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, கோயிலின் பின்பக்க வழியாக அழைத்துச் செல்லும் செயல்களை தொடர்ந்து வாடிக்கையாக கொண்டு செயல்பட்ட அப்பகுதியை சேர்ந்த 28 நபர்கள் மீது கோயிலின் இணை ஆணையர் கல்யாணி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் நேரில் அளித்த புகாரினைத் தொடர்ந்து, சமயபுரம் போலீசார் 28 நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்.  இக் கோயிலுக்கு தினசரி பல்லாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக செவ்வாய் ,வெள்ளி ,ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி, தினங்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வந்து கோயில் உள்ள அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை
செலுத்தி வருகின்றனர் . இந்த காலகட்டங்களில் கோயிலில் அதிகளவு கூட்டம் இருப்பதனை பயன்படுத்தி சமயபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் விரைவு தரிசனம் செய்து தருவதாக குறிப்பாக வசதி படைத்தவர்களை குறி வைத்து கோயிலின் பின்பக்க வழியாக அழைத்துச் சென்று சமயபுரம் கோயிலுக்கு வரக்கூடிய வருவாயை இழப்பீடு செய்யும் வகையில் செயல்பட்டு வந்தனர்.

இதனை தடுக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவன பாதுகாப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நியமித்து தடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் நிறுவன பாதுகாப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரை கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட நபர்களை தடுத்து நிறுத்திய போது இதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் தணிகைவேல் ஆகிய இருவரும் தனியார் நிறுவன காவல் உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கினர். இது தொடர்பாக இருவரையும் சமயபுரம் போலீசார் கைது செய்தனர் .

இருப்பினும் இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து கோயில் நிர்வாகத்திற்கு இழப்பீடு நடைபெறும் வகையில் செயல்பட்ட இப்பகுதியைச் சேர்ந்த 28 நபர்கள் குறித்து உரிய சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி புகாராக நேரில் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சமயபுரம் போலீசார் சிசிடிவி கட்சியில் இடம் பெற்று இருந்த அந்த 28 நபர்களையும் போலீசார் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். அதே வேளையில் கோயிலின் பின்பக்கமாக தன்னிச்சையாக அழைத்து செல்லும் கோயில் நடை வழியினை கோயில் நிர்வாகம் தற்காலிகமாக பூட்டி வைத்து பக்தர்கள் எளிதில் வந்து சென்று சாமி தரிசனம் செய்யும் வழியில் வழி நடைகளை மாற்றி அமைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!