தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், பரிசல்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உபரிநீர் வினாடிக்கு 51 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தற்போது காவிரி ஆற்றில் நீர்திறப்பு குறைப்பால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. எனவே ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும் வெள்ளப் பெருக்கால் அருவிகள் உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்பு அம்சங்கள் பழுதாகியுள்ளதால், நீர்வீழ்ச்சி பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அருவி மற்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.