சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கை மதுரை முதலாவது கூடுதல் விசாரணை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவில், ‘போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மதுரை சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு என்னை மாற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை புதுவை, ஆந்திரா அல்லது கேரளாவுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்,’ என கோரினார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ரவீந்தர் பட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் ஆஜராகி, ‘சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக, தற்போது வரை 105க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை 45 முறை விசாரித்துள்ளது.
இதனால், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. மனுதாரரை வேறு சிறைக்கு மாற்றவும் உத்தரவிட முடியாது,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.