சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டுப்பள்ளி, கோலார், ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது.
தினசரி 75 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அதன் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 110 ரூபாயை தொட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்த திடீர் கோடை மழையால் அங்கு தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதே வரத்து குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.