தமிழகத்தில் BA4 என்னும் புதிய வகை கொரோனா தொற்று

 

தமிழகத்தில் BA4 என்னும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நாவலூரில் தாய் மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் ஒருவருக்கு BA4 என்னும் புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் முதல் முறையாக BA4 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதுவரை யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்போது தமிழகத்திலும் கண்டறியப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

 

Translate »
error: Content is protected !!