அமெரிக்காவில் வசிக்கும் துன்கு வரதராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட குடியரசு அமையும் என பதிவு செய்திருந்தார்.
இது நாட்டை துண்டாடும் வகையில் உள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த வைகுந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, யாரோ, எதையோ சொன்னார்கள் என்பதை வைத்து பிரச்னையை கிளப்பக் கூடாது எனவும், அனைத்து விஷயங்களும் தீவிரமாக்கப்படுவதாகவும், குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் அனுமதி கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.