நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று தன்னையும் அமலாக்கத்துறை நினைத்துக் கொண்டுள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பத்ரா சால் முறைகேடு வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்திற்கு சொந்தமான ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், இதற்கெல்லாம் பயப்படுபவன் தான் அல்ல என்றும், மகாராஷ்டிர அரசை கவிழ்க்க மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே தன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். உண்மை ஒரு நாள் வெளியே வரும் எனவும் கூறினார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ” வாய்மையே வெல்லும்” எனவும் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், அமைச்சர் நவாப் மாலிக்கை தொடர்ந்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீதும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து இருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.