பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆயிரத்து 627 புள்ளி 83 கோடி செலவில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
அதன்படி தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, முதற்கட்டமாக முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் காணொளி வாயிலாக தொடக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியை பார்வையிட்டார். இதன் மூலம் குறைந்தது 1 ஜிபிஎஸ் அளவிலான அலைக்கற்றையுடன் அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்றும், இதற்கென தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.