சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை எதிரே உள்ள பெரியார் சிலை அருகே அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சிப்பாய் எல்லாம் நம்ம ஆளு, கர்னல் எல்லாம் உங்க ஆளு, அக்னிபாத் திட்டமா? குலக்கல்வி திட்டமா? என்றும் பார்ப்பானுக்கு கல்விப் பயிற்சியா??? சூத்திரனுக்கு இராணுவப் பயிற்சியா? என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆள் சேர்க்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு செய்து வருவதாகவும், இந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றரை வருடம் பயிற்சி போக்கிவிடும் என்று இளைஞர்கள் குமுரு வதாகவும், இதனால் இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.