ஒரே கல்வியாண்டியில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்த பி.ஏ. – பி.எட். படித்த ஜெகதீஸ்வரி என்பவர், ஒரே கல்வியாண்டில் ஒரு பட்டத்தை நேரடியாகவும், மற்றொன்றை தொலைதூர கல்வி மூலமும் முடித்ததாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஜெகதீஸ்வரி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல ஒரே கல்வியாண்டில் பி.ஏ. மற்றும் பி.எட். படிப்புகளை முடித்த கவிதா என்பவர் தொடர்ந்த வழக்கில் அவர் கோரிக்கையை ஏற்று, அவருக்கு பணி வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில், 2 பட்டப்படிப்புகளை ஒரே கல்வி ஆண்டில் படித்த, சித்ரா உள்ளிட்ட மூவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், தண்டபானி, ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரடியாகவும், தொலைதூர படிப்பு மூலமும் ஒரே கல்வி ஆண்டில் பட்டம் பெறுவதற்கு தடை விதிக்க சட்டப்பிரிவு இல்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும் 2 பட்டங்களுமே அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்கள் மூலமாக வழங்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒரே கல்வியாண்டியில் 2 பட்டப்படிப்பை அனுமதிப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், இதுசம்பந்தமான பரிந்துரை மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரே கல்வியாண்டில் பெறக்கூடிய 2 பட்டங்களை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருதமுடியாது என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, தனி நீதிபதி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.