காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட எம்.டி.எம்.எல். கட்டிடத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் தலைவர் ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். கர்நாடாக சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் நேரடியாகவும் கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் காணொலி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதலாவதாக நான்கு மாநில அதிகாரிகளும் நீர்வழங்கல் உள்ளிட்ட புள்ளி விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். அதே போல் தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் காவிரியில் இருந்து மாதமாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளின் மழைப்பொழிவு அளவு, தண்ணீர் வரத்து ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடாக அரசு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 25 நிமிடங்களிலேயே இன்றைய கூட்டம் நிறைவடைந்தது.