வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வங்கக்கடலிலும் வரும் 6ம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும், அதன்பின் இந்த சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 6ம் தேதியும், தென் கிழக்கு வங்க கடல் அந்தமான் கடல் பகுதிகளில் 7ம் தேதியும் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையில் சூறாவளி காற்று வீசும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு ஏழாம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 40 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 19 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.