வெள்ள நீரில் மூழ்கும் வீடுகள் – அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை தற்போது வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தி.நகர், கோடம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாத அவல நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் கடந்த 4 நாட்களாக வீடுகளினுள் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளது. அதனை வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். தி.நகர், மேற்கு மாம்பலம் பகுதிகளில் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அசோக் நகர், அடையாறு, கொருக்குப்பேட்டையில் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. மழையால் சென்னை பெருநகரின் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!