ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

 

விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனரின் செயல்பாடு சட்டவிரோதமானது என அறிவித்து, தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல தமிழக அரசின் தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்யக்கோரி ரவிச்சந்திரன் கடந்த 2020ஆம் ஆண்டு மதுரை கிளையில் வழக்கு தொடருந்திருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும்,  இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார். அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்த பிறகு, விடுவிக்கப்படாத ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாக கருதி தன்னை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அரசியல்சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டார். தாமாக விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் சாமிதுரை ஆஜராகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் தன்னை விடுவிக்க தமிழக அரசு 2018அம் ஆண்டு முடிவெடுத்தாலும் இதுவரை சிறைவாசம் அனுபவிப்பதாகவும், அரசின் முடிவை அமல்படுத்தும் வகையில் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டுமென வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  நளினிக்கு  விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார். ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் வாதிட்டார். பேரறிவாளன் மட்டுமல்லாமல் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களையும் ஆளுநரிடமிருந்து கடந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியே குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி  மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் விடுதலை செய்யக்கோரி ஆட்கொணர்வு மனு என்ற அடிப்படையில் தொடரப்பட்ட வழககு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையி அதே கோரிக்கையுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த மனு நிலைக்கத்தக்கதல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் போல விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!