திமுக அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் பரபரப்பு

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக திமுக – அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவும், செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை சில திமுக கட்சியினர் தாக்கியதாலும் அசாதாரண சூழல் நிலவியது. மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, 100 வார்டு உறுப்பினர்கள் அனைவரும் அரங்கிற்கு வருகை தந்தனர்.

கூடத்தில் வார்டு எண் வாரியாக உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில், அதிமுக உறுப்பினர்கள் 15 பேருக்கு மட்டும் தனியாக இருக்கை ஒதுக்கி தருமாறு கடந்த காலங்களில் மன்றத்தில் அவர்கள் வைத்த கோரிக்கைக்கு பலன் இல்லாத நிலையில், இன்று காலை அவர்களாகவே 15 இருக்கைகளை தேர்வு செய்து வரிசையாக அமர்ந்து கொண்டனர்.

இதனால், திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக உறுப்பினர் ஒருவர் அதிமுக உறுப்பினர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேறுமாறு திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கோஷத்தால் கூடத்தினுள் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மேயர் இந்திராணியின் அறைக்கு சென்று நேரில் புகார் அளித்தனர். புகார் அளிக்க சென்ற அதிமுக உறுப்பினர்களை பின்தொடர்ந்து சென்ற ஊடகத்தினரை, சில திமுக கட்சி பிரமுகர்கள் மேயர் அறை வாயிலில் வைத்து செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து கதவுகளை அடைத்து தரக்குறைவாக பேசி, தாக்கியுள்ளனர். இதனால் ஊடகத்தினர் அனைவரும் ஒன்றாக மேயர் அறை முன்பு கூடி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து முறையிட்டனர்.

இந்த சம்பவங்கள் காரணமாக, 11:30 மணிக்கு துவங்க வேண்டிய பட்ஜெட் கூட்டம் 1:15 மணி நேரம் தாமதமாக 12:45 மணிக்கு துவங்கியது. கூட்டம் துவங்கியதும் பேசிய மேயர் இந்திராணி,
அதிமுக உறுப்பினர்களுக்கு அடுத்த கூட்டத்தில் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என மேயர் இந்திராணி மன்றத்தில் உத்தரவாதம் அளித்தார். மேலும், ஊடகத்தினரை செய்தி சேகரிக்க விடாமல் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Translate »
error: Content is protected !!