மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களைத் தேர்வு செய்து புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு குழுவின் உறுப்பினராக நியமித்திருக்கும் முதல்வருக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இக்குழு தமிழ்நாட்டின் மரபுகள், கல்வி உரிமை, சமூக நீதி, மொழி, பண்பாடு மற்றும் கலை, இலக்கியம் ஆகியவற்றின் தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்டும் வகையிலும், காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனைப் பெறும் வகையிலும் சிறந்ததோர் கல்விக் கொள்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.