காளியம்மன் கோவிலில் ஒரு சமூகத்தினரை உள்ளே விடவில்லை என குற்றச்சாட்டு

 

பழனி அருகே காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தரேவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவிலில் ஒரு சமூகத்தினரை உள்ளே விடவில்லை என்ற குற்றச்சாட்டும், இது ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் என்றும், ஒரு சமுதாயத்தினர் அனைவரும் இணைந்து நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்ட கோவிலில் வேண்டுமென்றே தகராறு செய்வதாகவும் பரஸ்பரம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சித்தரேவு. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்த நிலையில், உள்ளூர் நிர்வாக பிரச்சனை காரணமாக கோவில் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு சிதிலமடைந்தது. இதன் காரணமாக சித்தரேவு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதே பகுதியில் புதிதாக உச்சிகாளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் கட்டி கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழனி-கோவை நெடுஞ்சாலையில் சாலைமறியல் நடைபெற்றது.அப்போது அவர்கள் தெரிவித்ததாவது :- பழைய கோவில் பூட்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சார்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதியகோவில் கட்டப்பட்டுள்ளது.அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்றும், எனவே தங்களை சாமி கும்பிட அனுமதிக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து கோவில் கட்டிய ஒரு சமுதாயத்தினர் கூறியதாவது :- பழைய கோவில் சிதிலமடைந்ததால்  சொந்தமாக 2சென்ட் நிலம் வாங்கப்பட்டு, குடும்பத்திற்கு 40ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு எங்களது நிதிப் பங்களிப்பில், புதிதாக உச்சிகாளியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவிலை கட்டினோம். கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை முடிந்து தற்போது இரண்டு மாதமாகியுள்ள நிலையில் தற்போது, புதிதாக கட்டப்பட்ட கோவில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவிலில் தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஒரு பிரிவினர் கூறி பிரச்சினை ஏற்படுத்துவதாகவும், இதனையடுத்து நாங்கள் செய்த செலவில் ஒரு தொகையை கெடுத்து விட்டு கோவிலுக்கு வாருங்கள் என்றும், இல்லாவிட்டால் நாங்கள் செலவு செய்த பணத்தை முழுமையாக கொடுத்தால் நாங்கள் வெளியேறி கொள்கிறோம் அல்லது அவர்களே சொந்தமாக புதிய கோவில் கட்டினால்   அதற்கு நாங்களும் நிதி உதவி செய்கிறோம் என்றும் தெரிவித்தும் அவர்கள் எதற்கும் சம்மதிக்கவில்லை என்றும், ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் ஒற்றுமையாக உள்ள கிராமத்தில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்வதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து வருவாய்த்துறையினர் தலைமையிலான அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மேலும் கோவில் இடத்தை அளந்து அரசு இடமா? அல்லது தனியார் இடமா என்று தெரிவித்தபிறகு பேசிக் கொள்ளலாம் என் இருதரப்பினரிடமும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில் நடந்த சாலைமறியல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!