கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் மூன்று அலைகள் முடிவடைந்து அந்தப் பெயரை மறந்திருக்கும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதும், ஒமிக்ரான் தொற்றும் பரவி வரும் செய்திகளும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 2 மாதங்களில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஒ.பன்னீர்செ்லவம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முககவசம் அணிதல், சமூக இடைடிவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.