அண்ணா பல்கலையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்*
கோவிட், டெங்கு, உணவுப்பாதுகாப்பு மற்றும் மங்கி பாக்ஸ் வைரஸ் தொடர்பாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கொரனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவக்கூடிய நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவியிருப்பதாகவும், இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்கும் பணி தொடங்கியிருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை விடுதியில் 6 பேருக்கு கொரானா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரி மட்டுமல்லாது பொதுமக்கள் கூடக்கூடிய அனைத்து இடங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.