இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, 7 மாதங்களுக்கு பின் 18 ஆயிரமாக சரிந்துள்ளது.
டெல்டா வகை கொரோனா பரவலுக்கு பின், நாடு முழுவதும் பதிவாகும் கொரோனா நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினசரி வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 166 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக உள்ளது. இது கடந்த 208 நாட்களில் பதிவான எண்ணிக்கையை காட்டிலும் குறைவு என கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சிகிச்சை முடிந்து 23 ஆயிரத்து 624 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 71 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தீவிர தொற்றுக்கு 214 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை 94 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரத்து 175 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.