தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டும். அருவியில் குளிப்பதற்ககாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் குவிந்து வருகின்றனர். இதேபோல், சுருளியில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிகளும் தவம் புரிந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் குலதெய்வ வழிபாடு, குடமுழுக்கு, ஊர் முக்கிய கோயில் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு முன் இங்குள்ள பூதநாரயணன் கோயில், வேலப்பர் கோயில், கன்னிமார் கோயில்களிலும் வழிபட்டு தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். சுருளியில் சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், தை பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விசேஷங்களில் இங்குள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். சித்திரை முதல் நாளான இன்று அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் குவியத் தொடங்கினர். பக்தர்கள் கோயில்களில் பூஜைகளில் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாக்கள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருவியில் நீராடி வருகின்றனர்.