கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக 4 ராமர் பக்தர்கள் போலீசாரால் சுடப்பட்டு இன்னுயிர் நீத்தனர். அவர்கள் எதற்காக உயிர் நீத்தார்களோ அவர்களது கனவு நிறைவேறும் விதமாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் விதமாக சிலர் பேசிக்கொண்டு வருகிறார்கள். இது போன்ற விமர்சனங்கள் மற்றும் எத்தனிப்புகளும் அந்தந்த காலகட்டங்களிலேயே முறியடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது முயற்சி பலிக்காது. கடந்த செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை ஒரு மாதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்றிய அமைச்சர்கள் வருகை தருவது அரசின் திட்டங்கள் எல்லாம் சரியாக செயல்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்வதற்குத்தான். தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்