அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினரை கொண்டு திமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் மத்தியில் திமுக அரசு வெறுப்பினை சம்பாதித்துள்ளதாக விமர்சித்துள்ள ஓபிஎஸ் ஈபிஎஸ, ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் அதிமுகவின் மூன்று முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை என்ற பெயரில் திமுக அரசு ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.