தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னை அக்கட்சியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் எடப்பாடி தரப்பு திணறி வருகிறது.
இந்த சூழ்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆளுமையை நிலைநிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வமும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன்படி, எடப்பாடி தலைமையின் அதிருப்தி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அதேபோன்று, சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். அதன்படிதான், பண்ருட்டி ராமச்சந்திரன், மைத்ரேயன் ஆகியோரை தன் பக்கம் இழுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் நீதிபதிகள் அளித்த உத்தரவு தடையாக அமைந்தது. ஓபிஎஸ் பிரச்னை செய்தாலும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் பதவியை யாராலும் தடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறி வருகிறார்.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், அதிமுக 51ம் ஆண்டு தொடங்குவதையொட்டி மாவட்டங்கள் தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டன. பன்னீர்செல்வத்தின் ஆட்கள் வெளியேறியுள்ளதால், தற்போது புதிய பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் எடப்பாடி கேட்டுக் கொண்டார். அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும் நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், அவருடன் எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அவர்களும் அதிமுக 51ம் ஆண்டு தொடக்கவிழாவை காண்பதால் மாவட்ட வாரியாக பொதுக் கூட்டம் நடத்துவது, சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.