தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நேற்று நடந்தது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதன் பிறகு வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
தமிழ்நாட்டில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் 2022-2023 கல்வி ஆண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) ரூ.150 கோடியில் உருவாக்கப்படும். 10 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ரூ.210 கோடி மதிப்பில் 2,713 நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும்,
2022-2023-ம் கல்வி ஆண்டில் ரூ.100 கோடி மதிப்பில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்க 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும்,
கல்வி, கவின்கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சென்னையில் ரூ.7 கோடி மதிப்பில் சீர்மிகு பள்ளி அமைக்கப்படும் எனவும்,
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக்கல்வி கட்டிடங்கள் அவற்றின் தனிச் சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும். அவற்றில் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும்,
சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஒவ்வொரு ஆண்டும் 100 பேருக்கு விருதும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும் எனவும்,
தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாசாரம், தொன்மையின் சிறப்பு, குடியேற்றப் பகுதிகள் குறித்த தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும் எனவும்,
ரூ.25 கோடி செலவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் செயல்படுத்தப்படும். அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப அறிவு, கணினி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த கணினி நிரல் மன்றங்கள் ரோபோடிக் கற்றுக்கொள்ள எந்திரனியல் மன்றங்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் எனவும்,
மாணவர்களின் உடன் நலன் காக்க உடலியக்க நிபுணர்கள் மூலம் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும் எனவும்,
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் செயல்வழி கற்றலை ஊக்குவிக்க அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்து அவற்றில் விளையும் காய்கள், பழங்கள் சத்துணவில் பயன்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்,
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையே சதுரங்கம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த ரூ.1 கோடி மதிப்பில் பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் செயல்படுத்தப்படும். அரசு மேனிலை பள்ளி கணினி பிரிவு மாணவர்களிடம் வசூலிக்கப்படும் ரூ.200 தனி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும்,
பல குறைபாடுகள் காரணமாக பள்ளிக்கு வர இயலாத 10 ஆயிரத்து 146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளில் நேரடியாக அளிக்க ரூ.8 கோடியே 11 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தபடும். ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வுகளை நடத்தவும், மற்ற நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் ரூ.30 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும்,
நூலகத்துறையில் நூலக நண்பர்கள் திட்டம் ரூ.56.25 லட்சம் செலவிலும், மெய்நிகர் நூலகம் ரூ.57.20 லட்சம் செலவிலும், ரூ.23.40 லட்சம் செலவில் வை-பை வசதியும் ஏற்படுத்தப்படும் எனவும்,
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகளை மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் டிஎன் டாக் என்ற பெயரில் நடத்தப்படும் எனவும்,
பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 20 நூல்கள் ரூ.30 லட்சம் செலவில் வெளியிடப்படும். அறிஞர் பெரியசாமி தூரன் தொகுத்த கலைக் களஞ்சியங்கள் 10 தொகுதிகள், சிறார் கலைக் களஞ்சியங்கள் 10 தொகுதிகள் ஆவணப்பதிப்பாக ரூ.10 லட்சம் செலவில் வெளியிடப்படும் எனவும்,
நூற்றாண்டு காணும் படைப்பாளிகளின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளைப் போற்றும் வகையில் அவர்களின் தலைச்சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும் எனவும்,
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க ரூ.9 கோடியே 83 லட்சம் செலவில் எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.