குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு: இழப்பீட்டை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குவாரிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள கல் குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பிரபு என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சட்டவிரோத குவாரிகளை திடீர் ஆய்வுகள்  செய்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் தாக்கல் செய்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டவிரோத குவாரிகளால் 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஈடுபட்டவர்கள் மீது 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வருவாய் இழப்பை வசூலிக்கும் நடவடிக்கையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் பிரபு ஆஜராகி அரசுக்கு இழப்பு குறித்த தகவல் மட்டுமே அறிக்கையில் இருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவிட்டபின்  உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது என தெரிவித்ததுடன், சுற்றுசூழல் பாதிப்புக்க்கான இழப்பீட்டை வசூலிக்க வேம்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் குவாரிகள் மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பாக மாநில அரசின் திட்டமிடல் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Translate »
error: Content is protected !!