அமெரிக்காவில் ஃபேஸ்புக்கை பார்க்கும்போதெல்லாம் கன்னத்தில் பளார் என்று தன்னை அறைவதற்காகவே மனீஷ் சேத்தி என்பவர் ஒருவரை சம்பளத்திற்கு வேலைக்கு வைத்துள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான மனீஷ் சேத்தி பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சிறந்து விளங்கவும், தன்னுடைய தொழிலை முன்னுக்கு கொண்டு வரவும், நிறைய லாபம் சம்பாதிக்கவும் ஒரு புது ஐடியாவை கையில் எடுத்துள்ளார். அதாவது, இவர் நிறைய நேரம் ஃபேஸ்புக்கிலேயே மூழ்கிவிடுகிறாராம்.. இப்படி எந்நேரேமும் ஃபேஸ்புக்கே கதி என்று கிடப்பதால்தான் தன்னுடைய தொழிலில் சறுக்கி வருவதாக நினைத்தார். அதனால் இனிமேல் தேவையில்லாமல் ஃபேஸ்புக் பார்க்க கூடாது என்று முடிவு செய்து கிரெய்க்லிஸ்ட் என்ற கம்பெனியில் இருந்து காரா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளார். இவரது வேலை என்னவென்றால், எப்பவுமே சேத்தி பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ள வேண்டுமாம்.. மனீஷ் எப்போதெல்லாம் ஃபேஸ்புக் பக்கம் போகிறாரோ, அப்போதெல்லாம் காரா, அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அடி அடிக்கணும்.இதுதான் அவரது பணி.. இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள். ஆனால் இந்த சம்பவம் 2012-ல் நடந்துள்ளது.
இது இப்போது வெளிவரக்காரணம் காரா வந்த நேரம், மனீஷ் கம்பெனி வளர்ந்து உற்பத்தியும் பெருகி விட்டது. அதாவது அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டதாம். அதனை இப்போது பலரும் பகிர்ந்து நாமும் இப்படி ஒரு ஆளை பக்கத்தில் வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் எங்கேயோ செல்வோம் என பதிவிட்டு வருகின்றனர். நாம் கூட ஒரு நாளில் பாதி நேரம் சமூக வலைத்தளங்களில் தான் மூழ்கி கிடக்கிறோம் என்பது இதனை படிக்கும் போது உங்கள் மைண்டுக்குள் வருகிறது அல்லவா..!