அரசு பள்ளிகளில் படித்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என 124 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் பி.இ.,பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் இருக்கின்றன.முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் 24-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
7.5 இடஒதுக்கீடு மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பொது பிரிவினருடன் 25ஆம் தேதி அவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கி 4 சுற்றுகளாக நடக்கிறது.
அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. கடந்த ஆண்டு வரை கலந்தாய்வு தொடக்கத்தில் முன்பண கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நேரடியாக மாணவர் விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தேர்வு செய்ததில் தற்காலிக ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கப்படும். அதில் மாணவர் ஒரு இடத்தை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.