ஆவின் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்ட பிரச்சினையின் ஈரம் காய்ந்த சில மாதங்களிலேயே மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட “ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுக்குள் ஈ” இருந்த விவகாரம் ஆவின் பாலின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு கடும் அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது. அத்துடன் இந்நிகழ்வு ஆவின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கிற்கு மீண்டும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
ஏனெனில் சாதாரண சிறிய வகையிலான தனியார் பால் நிறுவனங்களில் கூட சுகாதார நடைமுறை, தரக்கட்டுப்பாட்டு வசதிகள் என்பது முறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் சூழலில் உலக தரச்சான்று பெற்ற தமிழக அரசின் மதுரை ஆவின் மத்திய பால் பண்ணையில் பால் பாக்கிங் நடைபெறும் வளாகத்தில் Flycatcher மற்றும் திரவ கரைசல் பயன்படுத்தி ஈக்கள் வராமல் இருப்பதற்கான சுகாதார நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படாமலும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பாக இருப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கத் தவறி மெத்தனமாக நடந்து கொண்டதாலும் தான் பால் பாக்கெட்டிற்குள் ஈ இருந்த நிகழ்வு நடைபெற்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேலும் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்த விவகாரத்தில் பாக்கிங் நடைபெற்ற சமயம் பணியில் இருந்த உதவிப் பொதுமேலாளர் சிங்காரவேலு அவர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது என்பது அம்பு எய்தவர்களே அந்த அம்பு மீது பழிபோட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் துறை சார்ந்த அமைச்சர் அதனை கண்டிக்காமல் அமைதியாக இருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழக அரசுக்கு சொந்தமான ISO தரச்சான்று பெற்ற மதுரை ஆவினில் இப்படியொரு ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்றால் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய பொதுமேலாளர் (சாந்தி), நிர்வாகம் மற்றும் நிதி உதவி பொது மேலாளர் (ராமலிங்கம்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உதவிப் பொதுமேலாளர் சிங்காரவேலு மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க நினைப்பதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்க கூடாது.
தற்போதைய அசாதாரண நிகழ்வுகளுக்கு மதுரை ஆவினில் பணியாற்றும் உயரதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணமாகும் என்பதால் உதவிப் பொதுமேலாளரை பணியிடை நீக்கம் செய்தது போல மதுரை ஆவினில் மெத்தனப் போக்கோடு நடந்து கொண்ட உயரதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு பணியிட மாற்றமும், பணியிடை நீக்கமும் செய்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் “கறந்த பால் கறந்தபடியே கலப்படமின்றி நுகர்வோருக்கு வழங்குவதாகவும்”, ஆவின் பால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் உணவுப் பாதுகாப்புத்துறை, தரக்கட்டுப்பாட்டுத்துறை, ஆவின் தரப்பு என மூன்று தரப்பின் பரிசோதனைக்குப் பிறகே பால் பண்ணையில் இருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகத்திற்கு வருகிறது, தரமற்ற ஒரு பால் பாக்கெட்டுகள் கூட பால் பண்ணையில் இருந்து வெளியே வருவதில்லை என ஊடகங்கள் முன் தொடர்ந்து மார்தட்டி வரும் பால்வளத்துறை அமைச்சர் திரு நாசர் அவர்கள் இப்போதாவது தனது கூற்று தவறு என ஒப்புக் கொண்டு பால்வளத்துறையையும், ஆவினையும் கவனிக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும.
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் ஊழல், முறைகேடுகள் நிலவி வந்தாலும் கூட அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களின் தாய் நிறுவனமான ஆவின் ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களால் தொடர்ந்து ஊழல், முறைகேடுகளுக்கு முன்னுதாரணமாக திகழுந்து வருவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனையளிப்பதாகவும், கவலைக்குரியதாகவும் இருக்கிறது.
எனவே தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கி சின்னாபின்னமாகி, ஊழல் முறைகேடுகளுக்கு முன்னுதாரணமாகி வருவதை தடுத்து நிறுத்தி ஆவினை சீர்படுத்தவும், பாலின் சிறந்த தரத்திற்கு மட்டுமல்ல சிறந்த நிர்வாகத்திற்கும் ஆவின் முன்னுதாரணமாக திகழும் வகையில் செயல்படுவதை உறுதி செய்திட ஆவினிலும், பால்வளத்துறையிலும் அதிரடி மாற்றங்கள் எனும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் சாட்டையை அதிரடியாக சுழற்றவில்லை என்றால் உங்கள் ஆட்சி காலத்தில், உங்கள் கண் முன்னேயே ஆவின் நிறுவனம் அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம்.