பழனி முருகன் கோயில் மலை மீது சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோவிலில் மயில் குரங்கு மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் தங்களுடன் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களையும், திண்பண்டங்கள், பொங்கல் மற்றும் உணவுகளையும் கொண்டுவருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை மலை மீது சுற்றி திரியும் குரங்குகள் பறித்து செல்வதாகவும், சில நேரங்களில் செல்போன், பர்ஸ் போன்ற பொருட்களையும் குரங்குகள் பறித்து சென்று பக்தர்களுக்கு தொந்தரவு செய்வதாக புகார் வந்தது.
இதனை தொடர்ந்து குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதியில் விட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. வனத்துறையினர் உதவியுடன் மலைக் கோவிலில் குரங்குகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டன. கூண்டுகள் மூலம் அனைத்து குரங்குகளும் பிடிக்கப்பட்ட பின்பு கொடைக்கானல் வனபகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது வரை 50க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப்பட்டுள்ளது.