அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம்

 

பழனி அருகே உடன்பிறந்த அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நரிக்கல்பட்டி. இங்கு வசித்து வருபவர் செல்லமுத்து. விவசாயியான இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(24) என்கிற மகனும் உள்ளனர். இந்நிலையில் செல்வநாயகிக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காங்கேயம் சென்று வந்தனர். இன்று அதிகாலை வழக்கம்போல செல்லமுத்துவும் அவரது மனைவியும் விவசாயத்தோட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில்  வீட்டில் அக்கா தம்பி ஆகிய இருவர் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் காலை 8 மணியளவில் தந்தை செல்லமுத்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டிற்குள் மகள் செல்வநாயகி கழுத்தறுக்கப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தார்.அருகிலேயே மகன் செல்வக்குமார் கத்தியுடன் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து செல்லமுத்து சத்தம் போட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இரத்தவெள்ளத்தில் கிடந்த செல்வநாயகியை  மீட்க அருகில் செல்ல அச்சப்பட்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கெடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வநாயகியை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பி செல்வகுமாரையும் கைது செய்தனர். உடன் பிறந்த அக்காவை, தம்பியே கொலை செய்ய முயற்சித்தது ஏன் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!