அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குவதே ஆளுநரின் கடமை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு நாள் விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் விடுதலை வீரர்கள், தலைவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்து இருந்ததாக கூறியுள்ளார். ‘நீட்’ தேர்வு அவசியம் என்று பொருள்படும்படி மேலோட்டமாக ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகள், கடமைகளுக்கு உரிய மதிப்பை அளித்து எல்லை மீறாமல் தமது பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.