மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
“பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு செய்துள்ளனர். திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, முக்கியமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும்.1994ஆம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின் போது பத்து காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.
வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரிக்கையை பரிசீலிக்காமல், கொரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர். எனவே, பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஜூலை 15ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.