தனியார் பள்ளியில் படித்துவந்த கரூர் மாணவி கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்தில், தன்னை யார் பாலியல் தொந்தரவு செய்தார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள திமுக எம்பி கனிமொழி, “பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும் எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவி எழுதிய அந்தக் கடிதத்தில், “sexual harassment ஆல் சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கணும். என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன், ஆனா, இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியல. ஐ லவ் அம்மா, சித்தப்பா, மணி மாமா, அம்மு உங்க எல்லோரையும் ரொம்ப பிடிக்கும், ஆனா நான் உங்கிட்ட எல்லாம் சொல்லாம போகிறேன்… மன்னிச்சுருங்க என்றும், இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக் கூடாது என்றும், சாரி மச்சான் சாரி” என குறிப்பிட்டிருக்கிறார்.