கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை பொறுத்த வரையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து விசாரணையானது நடைபெற்றுவருகிறது.
அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களாக கடந்த 2017-ம் ஆண்டு சென்னை சிஐடி நகர் அடுக்குமாடி குறியிருப்பில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி, செந்தில் குமார், நவீன் பாலாஜி, ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் நேற்றைய தினம் கூட மதுரையை சேர்ந்த தொழிலதிபரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் கொடநாடு பங்களாவில் பல்வேறு ஆவணங்கள் திருபோனதாக வந்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாதிரியான ஆவணங்கள் மாயமானது. அந்த ஆவணங்கள் யாரால் எடுக்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதற்காகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முகஉதவியாளர் மற்றும் அவருடைய கார் ஓட்டுநராக இருந்த கந்தன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிறிதுகாலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பபட்டிருந்தது.
அதன் அடிப்படையில் கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக சிறிதுகாலம் பணியாற்றியதுடன் மட்டும் அல்லாமல் அரசு அலுவலகங்களுக்கு தனியார் டிராவல்ஸ் மூலமாகா வாகனங்களை வாடகைக்கு வழங்கியதாக தெரியவந்துள்ளது.