தலையை வெட்டி தோரணைம் கட்டி தொங்க விடுவோம் என எம்.பி சிவி சண்முகத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் டி.ஜி.பி அலுவலகத்தில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் அ.தி.மு.க அமைச்சரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான சி.வி சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் சி.வி சண்முகத்துகு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில தினங்களாக ராஜ்ய சபா எம்.பி-யான சி.வி சண்முகத்திற்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்.பி சி.வி சண்முகத்தின் தலையை வெட்டி தோரணமாக தொங்க விடுவோம் என ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் கூறினார்.
இதே போல 2021 ஆம் ஆண்டு சி.வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாரிடம் புகார் அளித்த போது, போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதன்பின் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், சி.வி சண்முகத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது எனவும், உடனடியாக அந்த போலீஸ் பாதுகாப்பை திரும்ப வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்களின் செல்போன் எண் ஆதாரத்துடன் டி.ஜி.பி-யிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், யார் தூண்டுதலின் பேரில் எதற்காக மிரட்டுகின்றனர் என போலீசார் கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.