எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவையில் தேர்தல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும், இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதுதொடர்பான தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதற்கு மத்திய அரசுக்கு 2019 ஆகஸ்டில் தேர்தல் ஆணையம் சில பரிந்துரைகளை செய்திருந்தது. கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தாக்கல் செய்தார்