சென்னையில் சமூக வலைதளம் மூலமாக காதல் வலை வீசி பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பின்னணிக்குரல் கலைஞராக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது காதலன் விக்ரம் வேதகிரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக கூறியதன் பேரில் திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் 2021ஆம் ஆண்டு விக்ரமுடன் காதல் ஏற்பட்டு ரகசிய இடத்தில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் இளம் பெண் தெரிவித்திருந்தார்.
பின்னர் ஊரறிய திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விக்ரம் ஆசைவார்த்தை கூறி பல முறை உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்த அப்பெண், தனது பாலியல் இச்சைகளை விக்ரம் தன் மீது திணித்து பாலியல் தில்லை கொடுத்ததாகவும், தன்னை தாக்கி ஒரு கட்டத்தில் ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும், விக்ரம் பயன்படுத்திய செல்போனை தனது வீட்டில் விட்டுச் சென்ற நிலையில், அதை ஆராய்ந்தபோது, சமூக வலைதளம் மூலமாக குறும்படம் எடுப்பதாக பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் காதலிப்பதாக உடலுறவு வைத்து அதை வீடியோவாக எடுத்திருப்பது தெரியவந்ததாக இளம் பெண் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விக்ரம் தன் சொந்த உறவுகளைப் பற்றியே ஆபாச கவிதைகள், மீம்ஸ் ஆகியவற்றை உருவாக்கி இருப்பதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன்னுடன் உறவு வைத்துக்கொண்ட வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி விக்ரம் தன்னிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். மேலும், 16 ஆம் தேதி விக்ரமுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காப்பாறுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இளம் பெண் அளித்த புகார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரம் வேதகிரி என்பவரை இன்று காலை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்ரமின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதே போல எத்தனை பெண்களை விக்ரம் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து விக்ரமிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.