மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் எனவும், தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு வழங்கப்படும் தையல் எந்திரம் திட்டத்தின் வயது உச்சவரம்பினை 45-ல் இருந்து 60 ஆக நீட்டித்து ரூ.1.48 கோடி செலவில் வழங்கப்படும் எனவும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக முதற்கட்டமாக, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியத்தை ரூ.1,200 ஆக உயர்த்தி ரூ.3.92 கோடி கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும்,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் எனவும், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 8 இல்லங்கள் திருநெல்வேலி, சேலம், திருச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ரூ.91.72 லட்சம் செலவில் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் வயது 50-ல் இருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.