எம்.ஜி.எம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அந்நிறுவனம் 400 கோடி ரூபாய்க்கு அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
எம்.ஜி.எம் குழும நிறுவனங்கள் மீதான வரி ஏய்ப்புப் புகார்களைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 6 நாட்களுக்கும் மேலாக நடத்திய சோதனையில் எம்.ஜி.எம் குழும நிறுவனம் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எம்.ஜி.எம் குழும நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு கணக்கில் காட்டாத முதலீடுகளை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.எம் குழுமத்தார் வியாபாரக் கணக்குகளை மறைக்க போலி ரசீதுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டத்தையும் சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் இருந்துகொண்டே வெளிநாடுகளில் உள்ள அவர்ககுக்குச் சொந்தமான ஹோட்டல்களை நிர்வகித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சோதனையில் கணக்கில் காட்டாத பணம் 3 கோடி ரூபாய் மற்றும் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சோதனை தொடர்பான முழுமையான அறிக்கை வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.