மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இணையதள பண பரிவர்த்தனை என்பது பல்வேறு தொழில் துறைகளிலும் தவிர்க்க முடியாததாகி கொண்டிருந்தாலும் கூட பால்வளத்துறையில் குறிப்பாக பால் விநியோக துறையில் தற்போது வரை 100% சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.
ஏனெனில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை சில்லரை வணிக நிறுவனங்களுக்கும், தேனீர் கடை, உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கும் அதிகாலை நேரங்களில் விநியோகம் செய்து விட்டு மாலை அல்லது இரவு நேரங்களில் தான் பணம் வசூல் செய்யும் பணிகளை இன்றளவும் பால் முகவர்கள் செய்து கொண்டிருப்பதால் இரவு வசூல் முடித்த பிறகு அந்த தொகையை வங்கியில் செலுத்தி பின்னர் இணையதள பண பரிவர்த்தனை செய்வது என்பது பால் முகவர்களால் இயலாத காரியமாகவே இருக்கிறது.
இந்த நிலையில் திருமலா பால் நிறுவனம் அக்டோபர் 1ம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தில் பால் முகவர்கள் கொள்முதல் செய்கின்ற பால் மற்றும் பால் பொருட்களுக்கான தொகையை குறிப்பிட்ட செயலி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும், ரொக்கமாக செலுத்தினால் அதற்கு ரொக்க பணம் கையாளும் கட்டணமாக 2% பிடித்தம் செய்யப்படும் என பால் முகவர்களை கலந்தாலோசிக்காமலும், பால் முகவர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் கிஞ்சித்தும் பரிசீலிக்காமலும் 23.09.2022தேதியிட்ட சுற்றறிக்கை வாயிலாக அறிவித்திருப்பது என்பது தங்கள் நிறுவனமே சர்வ வல்லமை பொருந்தியதாக காட்டிக் கொள்கின்ற சர்வாதிகார போக்காகும்.
பொதுமக்களுக்கும், பால் நிறுவனங்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பதோடு பால் நிறுவனங்களின் அபார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், லட்சங்களில் முதலீடு செய்து கோடிகளில் அந்நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கும் காரணியாகவும் விளங்கும் பால் முகவர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து சிறிதளவு கூட பரிசீலனை செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்துள்ள திருமலா பால் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
இணையதள செயலி மூலம் மட்டுமே பால் நிறுவனங்களோடு பண பரிவர்த்தனை செய்வது என்பது பால் முகவர்களைப் பொறுத்தவரை 100% சாத்தியமில்லாதது என்றாலும் வருங்காலங்களில் அதனை நடைமுறைப்படுத்த பால் முகவர்களோடும், பால் முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அலசி ஆராய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.