தமிழ் நாடு அரசு உத்தரவின் படி 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி உள்ள கடைகளில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரையைச் சேர்ந்த சிவராஜா தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் கேகே நகர் பகுதியில் நான் பால் கடை ஒன்றை நடத்தி வருகிறேன் எனது கடையில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சில கடைகள் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டிருந்தால் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி என தொழிலாளர் நலத்துறை சார்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் 24 மணி நேரம் கடையை நடத்தக்கூடாது என கூறி இரவு நேரங்களில் எனது கடையின் வந்து தொந்தரவு செய்கின்றனர். எனவே, எனது பால் விற்பனைக் கடையை 24 மணி நேரமும் நடத்த அனுமதித்து போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை வெளியிட்டுள்ள உத்தரவில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கிறது.
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் கடையானது தமிழ் நாடு அரசாணையின் வரம்பிற்குள் வருவதால், மனுதாரர் தனது கடையை நாள் முழுவதும் நடத்திக் கொள்ளலாம். மேலும் மனுதாரர் நாள் முழுதும் கடையை நடத்துவதற்கு காவல்துறையினர் இடையூறாக இருக்கக் கூடாது என உத்தரவிட்டார்.