நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், தர்காவின் 465வது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவரின் கோரிக்கையை பரிசீலிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, நான்கு மாதங்களுக்கு என நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பி குழுவை கலைப்பது குறித்து விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை எனவும், வக்பு வாரியத்திடம் ஒப்படைப்பதாக உயர் நீதிமன்றம் நியமித்த குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1946ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் வழங்கலாம் என வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவில் தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்க வேண்டும் என்ற தற்காலிக குழு தரப்பு கோரிக்கையை ஏற்று, அதை நீக்கிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.