சீர்காழி அருகே பூம்புகாரில் தேசிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது.தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்,தீயணைப்பு மீட்பு துறை வீரர்கள் மீனவர்களிடையே மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் தேசிய பேரிடர் விழிப்புணர்வு மற்றும் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. அரக்கோணத்தில் இருந்து வந்திருந்த டெபுட்டி கமெண்டர் வைத்தியலிங்கம் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் இணைந்து பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலில் சிக்கியவர்களை மீட்கும் விதங்கள் குறித்தும் நவீன உபகரணங்கள் முதல் ஆபத்துக்காலத்தில் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எவ்வாறு மீட்பு பணிகளை செய்வது ஆபத்து காலங்களில் தங்களைத் தாங்களே எவ்வாறு காத்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக பேரிடர் காலங்களில் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கேன்கள் முதல் பயனற்ற கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்,வாழை மரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஆபத்தில் உள்ள அவர்களை மீட்பது குறித்து விளக்கமளித்தனர். அதேபோல் ஆழ்கடலில் சிக்கியவர்களை ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் மீட்பது குறித்து விளக்கம் தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முகாமில் வருவாய்த்துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள்,ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.