நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த பண மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகன் ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதால் விசாரணையில் ஆஜராவதில் விலக்க கோரப்பட்டது. இதனையடுத்து சோனியாகாந்திக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவுற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார்.
அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம், சோனியா காந்தி இல்லம், ராகுல் காந்தி இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சோனியா காந்தியிடம் விசாரணையில் நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.