மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டவேண்டும்- அன்புமணி

மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ” தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு சற்றும் பொறுத்தமில்லாத, தேவையில்லாத நீட் தேர்வு மாணவர்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. நீட் தேர்வு நடப்பதற்கு சில மணி நேரம் முன்பாக மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வில் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக கனிமொழி தங்களிடம் கூறி வந்ததாகவும், அதனால் நீட் மதிப்பெண் குறைந்து மருத்துவப் படிப்பில் சேர இயலாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

மாணவி கனிமொழி பத்தாம் வகுப்பு மற்றும் 12&ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பில் 500&க்கு 469 மதிப்பெண்களும், 12&ஆம் வகுப்பில் 600&க்கு 562.5 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார். நீட் தேர்வு இல்லாமல் 12&ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால், மாணவி கனிமொழிக்கு மருத்துவ இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், அதில் தமக்கு போதிய மதிப்பெண்கள் கிடைக்காது என்ற அச்சமும் தான் கனிமொழியை தற்கொலைக்கு தூண்டியுள்ளன.

மாணவர்களின் உயர்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி மாணவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கக்கூடாது என்பதால் நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Translate »
error: Content is protected !!