தற்போதைய திமுக ஆட்சியில் பேருந்து நடத்துனர், காவல்துறையினர், பொதுமக்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்ததாகவும், தற்போது தி.மு.க ஆட்சியில் 17வது இடத்தில் உள்ளதாகவும் அ.தி.மு.க பொற்கால ஆட்சியாகவும், தி.மு.க கற்கால ஆட்சியாகவும் இருந்து வருவதாகவும் சாடினார். அ.தி.மு.க இணைப்பு என்பது எடுபடாத விஷயம் என்ற அவர், இனி அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறினார். சின்னதிரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டுமே தவிர தன்னிடம் கேட்கக்கூடாது எனவும் தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் எனவும் கூறினார்.