சென்னை குடியிருப்பு வளாகத்துக்குள் AC-ல் ஏற்பட்ட தீ – ஒருவர் உயிரிழப்பு

சென்னை லாய்ட்ஸ் சாலை ரோட்டரி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் முகமது மீரான் (35). இவரது வீட்டில் இன்று மதியம் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி முதல் தளத்தில் பிடித்த தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி முகமது மீரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயங்களுடன் புகையால் மூச்சு திணறி மயக்க நிலையில் இருந்த மேலும் 4 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

தீ விபத்து சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விற்பனை செய்யும் தனியார் கேஸ் நிறுவனத்தில் முகமது மீரான் பணியாற்றி வந்ததும், அவரது வீட்டின் முதல் தளத்தில் முகமது மீரான் சிலிண்டர் மாற்றி பொருத்தும்போது ஏற்பட்ட கசிவால் தீவிபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், தீ வேகமாக பரவி இன்னொரு அறையில் இருந்த AC-ல் தீ பிடித்ததால், அதிலுள்ள கேஸ் காரணமாக தீ அதிகமாக பரவி விபத்தில் சிக்கி முகமது மீரான் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், குடியிருப்பு வளாகத்தினுள் மொத்தம் 6 வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் இருந்த நிலையில், உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் சிலிண்டர்கள் வெடிக்காமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!