மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார. சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். உதவி உபகரணங்களை வழங்கிய பின் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள “அனைத்தும் சாத்தியம்” என்னும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமான முறையில் அமைக்கபட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுதிறனாளிகள் தன்னிச்சையாக இயங்குவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவி இன்றி தன்னிச்சையாக அவர்களுக்கு தேவையான செயல்பாடுகளை அவர்களே செய்துகொள்வதற்க்கு தேவையான உபகரணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள், கல்வி கற்பதற்கு தேவையான உபகரணங்கள், மற்றும் பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரத்தியேகமாக பயன்படுத்தும் வகையில் அணுகுதல் தன்மை கொண்ட வீடு, சமையல் அறை, படுக்கை அறை, குளியல் அறை, வரவேற்பறை, உள்ளிட்ட பல்வேறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளது இதனை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழ் தலைமைச் செயலாளர் இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.