கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் செல்வகுமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கந்துவட்டி கொடுமையை தடுக்க ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற சிறப்பு ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கடந்த ஒரு வாரமாக ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக காவல்துறை மேற்கொண்டு கைது செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் 124 கந்துவட்டி புகார்கள் காவல் நிலையத்தில் வந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 89 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 32 கந்துவட்டி குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் 22 கந்துவட்டி குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு 40லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுகள் கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.